Freedom fighters history in tamil

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதில் பங்கேற்று அளப்பரிய தியாகங்களைச் செய்தவர்கள் ஏராளம். அவர்களில் கேப்டன் லட்சுமி, பரலி சு.நெல்லையப்பர், மாயாண்டி பாரதி ஆகியோரின் தியாகம் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கேப்டன் லட்சுமி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைக்குத் தலைமை தாங்கியவர் கேப்டன் லட்சுமி.

இவர், சென்னையில் பிறந்தவர். இவர் பெயர் லட்சுமி சாகல். ஜான்சி ராணி படைக்குத் தலைமை தாங்கியதால், கேப்டன் லட்சுமி ஆனார். 1938-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தார். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், அவர் குடும்பமும் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியது. 26 வயது நடந்துகொண்டிருந்தபோது, அவர் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.

அங்கு சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படை என்ற பெருமை, ஜான்சி ராணி படைக்கு உண்டு. சிங்கப்பூரில் Cardinal பெண்களைத் தேர்வுசெய்து ஜான்சி ராணி படை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், மலேசியாவிலிருந்தும் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் அதில் சேர்ந்தனர்.

1944-ம் ஆண்டு, சிங்கப்பூரில் பயிற்சி பெற்ற ஜான்சி ராணி படையைச் சேர்ந்த பெண்கள், பர்மாவை நோக்கிப் பயணமானார்கள்.

பர்மாவிலிருந்து டெல்லியை நோக்கிச் செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது. அந்தப் பயணத்தில் கேப்டன் லட்சுமியும் படையில் இருந்த பெண்களும் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

அந்தப் பயணத்தின்போது, இம்பாலில் இருந்த கேப்டன் லட்சுமியை ஆங்கிலேயே ராணுவம் கைதுசெய்தது. 1945-ம் ஆண்டு, மே மாதம் கைதுசெய்யப்பட்ட அவர், 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பர்மா காடுகளில் சிறைவைக்கப்பட்டார்.

பிற்காலத்தில், இந்திய தேசிய ராணுவத்தில் முக்கிய நபராக இருந்த கர்னல் பிரேம் குமார் சாகலை அவர் திருமணம் செய்துகொண்டார். பிற்காலத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் மருத்துவ சேவையை ஆரம்பித்த கேப்டன் லட்சுமி, கடைசிக்காலம் வரையிலும் தமிழ்நாட்டுடன் தொடர்பில் இருந்தார்.

பரலி சு.நெல்லையப்பர்!

திருநெல்வேலி மாவட்டம், பரலியைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட வீரரான பரலி சு.நெல்லையப்பர்.

வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சுஐயர் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்த சலவைத் தொழிலாளர்கள், சமையல்காரர்கள் உட்பட அனைவரையும் திரட்டி வ.உ.சிதம்பரனார் நடத்திய போராட்டத்தில் ஈடுபடுத்திய நெல்லையப்பரின் பங்கு முக்கியமானது.

1908-ம் ஆண்டு, மார்ச் 3-ம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடுவதற்காக காவல்துறையினரின் தடையை மீறி தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து வ.உ.சிதம்பரனார் ஊர்வலம் நடத்தினார்.

அந்த ஊர்வலத்தில் பரலி சு.நெல்லையப்பர் பங்கெடுத்தார்.

கப்பல் கம்பெனி நடத்தியது, ஊர்வலம் சென்றது, `வந்தே மாதரம்’ என முழக்கமிட்டது ஆகிய குற்றங்களுக்காக வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு கண்டனக் கூட்டம் நடத்துவதற்கான துண்டறிக்கைகளை வெளியிட்டார் நெல்லையப்பர்.

அதற்காக அவரைக் காவல்துறை கைதுசெய்தது. நீதிமன்றம் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்தது. அவர் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் அடைக்கப்பட்டார்.

1930-ம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதற்காக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். 1932-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார்.

1941-ம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். அதற்காக பெல்லாரி சிறையில் ஆறு மாதங்கள் அவர் அடைக்கப்பட்டார்.

1912-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைபெற்ற வ.உ.சிதம்பரனார், சென்னை சிந்தாரிப்பேட்டையில் குடியேறினார். அவரைச் சந்திப்பதற்காக சென்னைக்குச் சென்ற நெல்லையப்பர், சிறிது காலம் வ.உ.சிதம்பரனார் வீட்டில் தங்கினார்.

பிறகு குரோம்பேட்டையில் குடியேறிய அவர், இறுதிக்காலம் வரை அங்கு வசித்தார்.

மாயாண்டி பாரதி!

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதுதான் சுதந்திரப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியின் வாழ்க்கையாக இருந்தது. மதுரையைச் சேர்ந்த இவர், பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் தீவிரமாகச் செயல்பட்டவர்.

1941-ம் ஆண்டு மதுரை ஹார்வி மில் தொழிலாளர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

1941-ம் ஆண்டு கோயமுத்தூர் சிறையில் இருந்தபோது, கம்யூனிஸ்ட் தலைவர்களான ஜமத்கனி, வி.பி.சிந்தன், கே.ஏ. தாமோதரன் ஆகியோரை மாயாண்டி பாரதி சந்தித்தார். அவர்கள் நடத்திய மார்க்சிய வகுப்பால் ஈர்க்கப்பட்டு, பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.

தண்டனைக் காலம் முடிந்து 1942-ம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலையான பிறகு, மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆனார்.

1942-ம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, அவரின் அம்மா காலமானார். சிறையிலிருந்து அனுப்புவதற்கு ஆங்கிலேயே அரசு மறுத்துவிட்டதால், தன் அம்மாவின் இறுதி நிகழ்ச்சியில்கூட அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது.

பின்னர் தண்டனை முடிந்து 1944-ம் ஆண்டு அவர் விடுதலையானார்.

சுதந்திரப் போராட்டத்தின்போது ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்ற மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைக்குப் பின்னரும் போராடி சிறைக்குச் சென்றார். பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஆங்கிலேயரிடம் இருந்த தொழில்களையும், சொத்துகளையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார்.

அதற்காக, 1948-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். சுதந்திர இந்தியாவிலும் மக்கள் பிரச்னைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியவர் மாயாண்டி பாரதி.

அஞ்சலை அம்மாள்!

கடலூரில் ஓர் எளிய குடும்பத்தில் 1890-ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை அம்மாள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரராகக் களமாடியவர்.

`ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி’ என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. தன் குடும்பச் சொத்துகளாக இருந்த நிலங்களையும் வீட்டையும் விற்று, அந்தப் பணத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காகச் செலவுசெய்தார்.

1927-ம் ஆண்டு நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தன் ஒன்பது வயது மகள் அம்மாகண்ணுவுடன் கலந்துகொண்டார். அதில் கைதுசெய்யப்பட்டு தன் குழந்தையுடன் அவர் சிறைக்குச் சென்றார்.

சிறையில் இருந்த அஞ்சலை அம்மாள், அம்மாக்கண்ணு ஆகியோரை காந்தி சந்தித்தார். அம்மாக்கண்ணுவின் பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு வார்தா ஆசிரமத்துக்கு காந்தி அழைத்துச் சென்றார்.

1932-ம் ஆண்டு ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாளைச் சந்திக்க முயன்றார். ஆனால், அஞ்சலை அம்மாளை காந்தி சந்திப்பதற்கு ஆங்கிலேயே அரசு அனுமதிக்கவில்லை. நாடு விடுதலையடைந்த பிறகு, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக அஞ்சலையம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.